Showing 1-20 of 85 items.

ஹா, மீம்.

(யாவரையும்) மிகைத்தோனும், மிக அறிந்தோனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்டதே இவ்வேதம்.

பாவத்தை மன்னிப்பவனும், தவ்பாவை - மன்னிப்புக் கேட்பதை - அங்கீகரிப்பவனும், தண்டிப்பதில் கடுமையானவனும், தயை மிக்கவனும் ஆவான், அவனைத் தவிர நாயன் இல்லை அவனிடமே (யாவரும்) மீள வேண்டியதிருக்கிறது.

நிராகரிப்பவர்களைத் தவிர(வேறு எவரும்) அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றி தர்க்கம் செய்ய மாட்டார்கள். ஆகவே, பட்டணங்களில் அவர்களுடைய (ஆடம்பர) நடமாட்டம் உம்மை ஏமாற்றி விட வேண்டாம்.

இவர்களுக்கு முன்னரே நூஹின் சமூகத்தாரும், அவர்களுக்குப் பிந்திய கூட்டங்களும் (நபிமார்களைப்) பொய்ப்பித்தார்கள்; அன்றியும் ஒவ்வொரு சமுதாயமும் தம்மிடம் வந்த தூதரைப் பிடிக்கக் கருதி, உண்மையை அழித்து விடுவதற்காகப் பொய்யைக் கொண்டும் தர்க்கம் செய்தது. ஆனால் நான் அவர்களைப் பிடித்தேன்; (இதற்காக அவர்கள் மீது விதிக்கப் பெற்ற) என் தண்டனை எவ்வாறு இருந்தது?

இவ்வாறே, நிராகரிப்பவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தாம் என்ற உம்முடைய இறைவனின் வாக்கு அவர்கள் மீது உறுதியாகிவிட்டது.

அர்ஷை சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் தஸ்பீஹு செய்து கொண்டும் இருக்கிறார்கள்; அவன் மேல் ஈமான் கொண்டவர்களாக மற்ற ஈமான் கொண்டவர்களுக்காக மன்னிப்புக் கோருகின்றனர்;"எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!

"எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும், நிலையான சுவர்க்கத்தில், அவர்களையும், அவர்கள் மூதாதையர்களிலும், அவர்கள் மனைவியர்களிலும், அவர்கள் சந்ததியார்களிலும் நன்மை செய்தோரையும் பிரவேசிக்கச் செய்வாயாக. நிச்சயமாக நீ தான் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.

"இன்னும், அவர்களைத் தீமைகளிலிருந்து காப்பாயாக! அந்நாளில் நீ யாரை தீமைகளிலிருந்து காத்துக் கொள்கிறாயோ, அவர்களுக்கு நிச்சயமாக நீ அருள் புரிந்து விட்டாய் - அதுவே மகத்தான வெற்றியாகும்" (என்றும் கூறுவர்).

நிச்சயமாக நிராகரிப்பவர்களிடம்;"இன்னு நீங்கள் உங்கள் ஆன்மாக்களைக் கோபித்துக் கொள்வதைவிட அல்லாஹ்வுடைய கோபம் மிகப் பெரியதாகும்; ஏனென்றால் நீங்கள் நம்பிக்கையின் பால் அழைக்கப்பட்ட போது (அதை) நிராகரித்து விட்டீர்களே" என்று அவர்களிடம் கூறப்படும்.

அதற்கவர்கள்;"எங்கள் இறைவனே! நீ எங்களை இருமறை மரணமடையச் செய்தாய்; இருமறை நீ எங்களை உயிர்ப்பித்தாய்; ஆகையால் நாங்கள் (இப்பொழுது) எங்கள் பாவங்களை ஒப்புக் கொண்டோம் - எனவே (இதிலிருந்து தப்பி) வெளியேர ஏதும் வழியுண்டா?" எனக் கூறுவர்.

(பதில் கூறப்படும்;)"அதற்குக் காரணம் அல்லாஹ் ஒருவனே (வணக்கத்திற்குரியவன்; எனவே அவனை வணங்குங்கள்) என்று அழைக்கப்பட்ட போது நீங்கள் நிராகரித்தீர்கள்; ஆனால், அவனுக்கு (எதையும்) இணையாக்கப்பட்டால் (அதன் மீது) நீங்கள் நம்பிக்கை கொண்டீர்கள்; ஆகவே இத்தீர்ப்பு மிக்க மேலானவனும், மகாப் பெரியவனுமான அல்லாஹ்வுக்கே உரியது."

அவனே தன் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிக்கிறான்; உங்களுக்கு வானத்திலிருந்து உணவையும் இறக்கிவைக்கிறான் - எனவே அவனையே முன்னோக்கி நிற்பவர்களைத் தவிர (வேறு யாரும்) நல்லுணர்வு பெறமாட்டார்கள்.

ஆகவே, காஃபிர்கள் வெறுத்த போதிலும், நீங்கள் முற்றிலும் அவனுக்கே வழிபட்டு மார்க்கத்தில் பரிசுத்தத்துடன் அல்லாஹ் ஒருவனையே (பிரார்த்தித்து) அழையுங்கள்.

(அவனே) அந்தஸ்துகளை உயர்த்துபவன்; அர்ஷுக்குரியவன்; சந்திப்புக்குரிய (இறுதி) நாளைப்பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக தன் அடியார்களில் தான் நாடியவர்கள் மீது கட்டளையை வஹீ மூலம் இறக்கி வைக்கிறான்.

அந்நாளில் அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள்; அவர்களுடைய எந்த விஷயமும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இருக்காது அந்நாளில் ஆட்சி யாருக்குடையதாக இருக்கும் - ஏகனாகிய, அடக்கியாளும் வல்லமை மிக்க அல்லாஹ்வுக்கே யாகும்.

அந்நாளில் ஒவ்வோர் ஆத்மாவும், அது சம்பாதித்ததற்குக் கூலி கொடுக்கப்படும்; அந்நாளில் எந்த அநியாயமும் இல்லை. நிச்சயமாக, அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.

(நபியே!) அண்மையில் வரும் (கியாம) நாளைப்பற்றி அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக இருதயங்கள் விசனத்தால் நிரம்பி தொண்டைக்குழிகளுக்கு வரும் (அவ்)வேளையில், அநியாயக்காரர்களுக்கு இரக்கப்படும் நண்பனோ, அல்லது ஏற்றுக்கொள்ளப்படும் சிபாரிசு செய்பவனோ இருக்கமாட்டான்.

கண்கள் செய்யும் மோசத்தையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான்.

மேலும், அல்லாஹ் உண்மையைக் கொண்டே தீர்ப்பளிப்பவன். அன்றியும், அவனையன்றி அவர்கள் (வேறு) எவர்களை அழைத்(துப் பிரார்த்தித்)தார்களோ, அவர்கள் யாதொரு விஷயத்தைப் பற்றியும் தீர்ப்புச் செய்ய மாட்டார்கள் - நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியெற்பவனாகவும், தீர்க்கமாகப் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.