Showing 1-20 of 93 items.

தா, ஸீன். இவை குர்ஆனுடைய தெளிவான வேதத்துடைய - வசனங்களாகும்.

(இது) முஃமின்களுக்கு நேர்வழி காட்டியாகவும், நன்மாராயமாகவும் இருக்கிறது.

(அவர்கள் எத்தகையோரென்றால்) அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; இன்னும், ஜகாத்தைக் கொடுப்பார்கள்; அன்றியும், அவர்கள் மறுமை வாழ்வின் மீது திட நம்பிக்கை கொள்வார்கள்.

நிச்சயமாக எவர்கள் மறுமை வாழ்வில் நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நாம் அவர்களுடைய செயல்களை அழகாக(த் தோன்றுமாறு) செய்தோம்; எனவே அவர்கள் தட்டழிந்து திரிகிறார்கள்.

அத்தகையவர்களுக்குத் தீய வேதனை உண்டு மறுமை வாழ்வில் அவர்கள் பெரும் நஷ்டமடையவர்களாக இருப்பார்கள்.

(நபியே!) நிச்சயமாக மிக்க ஞானமுடைய (யாவற்றையும்) நன்கறிந்தவனிடமிருந்து இந்த குர்ஆன் உமக்குக் கொடுக்கப் பட்டுள்ளது.

மூஸா தம் குடும்பத்தாரை நோக்கி;"நிச்சயமாக நான் நெருப்பைக் காண்கிறேன்; உங்களுக்கு நான் அதிலிருந்து (நாம் செல்ல வேண்டிய வழி பற்றிய) செய்தியைக் கொண்டு வருகிறேன், அல்லது நீங்கள் குளிர்காயும் பொருட்டு (உங்களுக்கு அதிலிருந்து) நெருப்புக் கங்கைக் கொண்டு வருகிறேன்" என்று கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக!

அவர் அதனிடம் வந்த போது"நெருப்பில் இருப்பவர் மீதும், அதனைச் சூழ்ந்திருப்பவர் மீதும் பெரும் பாக்கயம் அளிக்கப் பெற்றுள்ளது மேலும் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிகவும் பரிசுத்தமானவன்" என்று அழைக்கப்பட்டார்.

"மூஸாவே! நிச்சயமாக நானே அல்லாஹ்! (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.

"உம் கைத்தடியைக் கீழே எறியும்;" (அவ்வாறே அவர் அதை எறியவும்) அது பாம்புபோல் நெளிந்ததை அவர் கண்ட பொழுது, திரும்பிப் பார்க்காது (அதனை விட்டு) ஓடலானார்"மூஸாவே! பயப்படாதீர்! நிச்சயமாக (என்) தூதர்கள் என்னிடத்தில் பயப்பட மாட்டார்கள்."

ஆயினும், தீங்கிழைத்தவரைத் தவிர அ(த்தகைய)வரும் (தாம் செய்த) தீமையை (உணர்ந்து அதை) நன்மையானதாக மாற்றிக் கொண்டால், நிச்சயமாக நான் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றேன்.

´இன்னும் உம்முடைய கையை உமது (மார்புபக்கமாக) சட்டைப் பையில் நுழையப்பீராக!´ அது ஒளி மிக்கதாய் மாசற்ற வெண்மையாக வெளிவரும். (இவ்விரு அத்தாட்சிகளும்) ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய சமூகத்தாருக்கும் (நீர் காண்பிக்க வேண்டிய) ஒன்பது அத்தாட்சிகளில் உள்ளவையாகும்; நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராக இருக்கின்றனர்.

இவ்வாறு, நம்முடைய பிரகாசமான அத்தாட்சிகள் அவர்களிடம் வந்த போது, அவர்கள்"இது பகிரங்கமான சூனியமேயாகும்" என்று கூறினார்கள்.

அவர்களுடைய உள்ளங்கள் அவற்றை (உண்மையென) உறுதி கொண்ட போதிலும், அநியாயமாகவும், பெருமை கொண்டவர்களாகவும் அவர்கள் அவற்றை மறுத்தார்கள். ஆனால், இந்த விஷமிகளின் முடிவு என்னவாயிற்று என்பதை நீர் கவனிப்பீராக.

தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம்; அதற்கு அவ்விருவரும்;"புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது அவன் தான், முஃமின்களான தன் நல்லடியார்களில் அநேகரைவிட நம்மை மேன்மையாக்கினான்" என்று கூறினார்கள்.

பின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார் அவர் கூறினார்;"மனிதர்களே! பறவைகளின் மொழி எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது மேலும், நாங்கள் எல்லா விதப் பொருள்களிலிருந்தும் (ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம்; நிச்சயமாக இது தெளிவான அருள் கொடையாகும்.

மேலும் ஸுலைமானுக்கு ஜின்கள் மனிதர்கள் பறவைகள் ஆகியவற்றிலிருந்து அவரது படைகள் திரட்டப்பட்டு, அவை (தனித் தனியாகப்) பிரிக்கப்பட்டுள்ளன.

இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி)"எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)" என்று கூறிற்று.

அப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும்,"என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!" என்று பிரார்த்தித்தார்.

அவர் பறவைகளை(ப் பற்றியும்) பரிசீலனை செய்து"நான் (இங்கே) ஹுது ஹுது(ப் பறவையைக்) காணவில்லையே என்ன காரணம்? அல்லது அது மறைந்தவற்றில் நின்றும் ஆகி விட்டதோ?" என்று கூறினார்.